“இவனெல்லாம் இப்டி கேட்டா உண்மையை சொல்ல மாட்டான் சார். விசாரிக்கிற விதத்துல விசாரிக்கணும்”
“அந்த தாம்பரத்துல தாலி அறுத்த கேசையும் , கொருக்குப்பேட்ட கொலை வழக்கையும் இவன் பேருல எழுது லே”
“நாமளாவது பரவால்ல, திருநெல்வேலி போலீஸெல்லாம் தோல உரிச்சிடுவாங்க”
“போலீஸ் லாட்டி இருக்குதுல்ல. அத உன் உடம்புக்குள்ள விட்டுட்டு தட்டி தட்டி கேட்டா உண்மையோடு சேர்ந்து எல்லா விஷயமும் வெளியில வந்துடும்”
என்று சினிமாவில் வசனங்கள் வரும்பொழுது சில்லறையை சிதற விட்டு கை தட்டிய கும்பலில் நானும் ஒருவன். காலம் காலமாக போலீஸ் வன்முறையை சகித்துக்கொண்டது மட்டுமல்லாமல் அதனைக் கொண்டாடியதன் விளைவு தான் இன்று அரங்கேறிய சம்பவம் என நான் கருதுகிறேன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற வாசகம் எந்த காலத்திலும் உண்மையாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அதற்கு ஒரு படி மேல் சென்று காவல்துறையை கண்டால் அஞ்சி நடுங்கவேண்டும் என்ற நிலை மட்டுமில்லாமல் அவ்வாறு அஞ்சாதவர் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் அவலம் இங்கு நிலவுகிறது.
‘போலீசையே எதிர்த்து பேசரியா?’ எனும் மனப்பான்மை அவர்களுக்கு வருவதற்கு, காரணம் என்ன? நமை பாதுகாக்கும் கடவுள் ஸ்தானத்தில் அவர்களை வைத்ததுதான் இவ்வாறு சில காவலர்கள் அரக்கர்களாக மாறுவதற்கு காரணியாக இருந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் சமூகத்தில் ஒரு பகுதி. ஒரு வணிகர், தொழிலாளி, பொறியாளர், மருத்துவர் போல காவல் துறையும் ஒரு அங்கமே தவிர லட்டிகளும் துப்பாக்கிகளும் கொடுக்கப்பட்டதால் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடித்து வெளுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.
எனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான், அவனை அடக்கி ஆளும் அதிகாரம் பிறப்பிலேயே எனக்கு உள்ளது என்ற நம்பிக்கை தான் சாதி வெறியின் உச்சமாக நான் பார்க்கிறேன். ஒட்டுமொத்த மக்களும் எனக்கு கீழே, நான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என கருதும் சில காவலர்களை சாதி வெறியர்களை விட கேவலமான இடத்தில் தான் வைக்க வேண்டும். காவல் துறை என்ற ஒரு துறையை மட்டும் குற்றம் சொல்லி ஒரு பயனும் இல்லை. அரசு சார்ந்த பல துறைகள் இப்படி அதிகார போதையில் ஊறி கிடக்கின்றன. ஜெயராஜ், பெனிக்ஸ் இரட்டைக்கொலை சம்பவத்தை அரங்கேற்றியது காவலர்களாக இருந்தாலும், அவர்களை அடித்து துன்புறுத்தியதை சிறிதும் கணக்கிலெடுக்காத மாஜிஸ்திரேட்டும் , சரியே பரிசோதிக்காத மருத்துவரும் சம பங்கு வகிப்பதாகவே நான் கருதுகிறேன். அந்நியன் பட பாணியில் இவர்களில் ஒருவர் தன் வேலையை சரியாக செய்திருந்தால் கூட இந்த உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் !
இது மட்டுமல்லாது இறந்தவர்கள் மாரடைப்பாலும், மூச்சுத்திணறலாலும் இறந்ததாக தெரிவித்த எஸ்.பி முதல், அதே காரணம் சொல்லி இதை மூடி மறைத்து அந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் முதலமைச்சர் வரை அனைவருக்கும் இதில் பங்குள்ளது. மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்த பின் அவசர அவசரமாக அந்த காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் இடமாற்றம், இடைநீக்கம் செய்து பாதுகாப்பது எதற்கு? வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்களேன். களைகளை பிடுங்கி எறிந்தால் உங்கள் துறைக்கு தானே நல்லது ? இது ஒரு பக்கம் இருக்க ‘காவலர்கள் ஊரடங்கு காலத்தில் ராப்பகலாக உழைப்பதால் அவர்களுக்கு இருக்கும் மன உளைச்சல் தான் இதற்க்கு காரணம்’ என்று கொடி பிடிப்போர் வேறு. அந்த பட்சத்தில் அவர்களுக்கு போதிய ஓய்வும் மனநல கலந்தாய்வும் செய்து வேலைக்கு தயாராக வைப்பது யார் பொறுப்பு? மக்களென்ன இவர்கள் அடித்து விளையாட ரப்பர் பந்துகளா ?
காவலர்கள் மீது மக்களின் கண்ணோட்டம் மாறுமோ இல்லையோ ஆனால் மக்கள் மீது காவலர்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். பணம், அதிகாரம் படைத்தோருக்கு ‘சார்’ போட்டு கும்பிடு வைத்துவிட்டு, எளிய மக்களை நாய்கள் போல் நடத்தும் போக்கை காவலர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நன்மை செய்யவேண்டும் என்று ஆசையோடு காவல் துறையில் சேரும் பலர் இது போன்ற கொடூரர்களை பார்த்து இதுதான் நாம் இங்கு பிழைப்பதற்கு ஒரே வழி என்று மாறிவிடுவது தான் இதில் வேதனை. வேலைக்கு தகுதி இல்லாத காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதை காவல் துறை தான் முன்னின்று நடத்த வேண்டும். உள்துறை புகார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரவேண்டும். மதிகெட்ட காவலர்களை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையத்தை தகர்க்க வேண்டும்.
இதில் ஒரு விஷயம் தான் என் மனதை வருடிக்கொண்டே இருக்கிறது. காவல் நிலையத்தில் இவர்களை சுற்றி சுற்றி அடித்து நிர்வாணமாக்கி பாலியல் கொடூரங்கள் செய்யும் ஒரு நொடி கூட அவர்களில் ஒருவருக்கு கூட தோன்றவில்லையா? இவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே என்று. ஒரு காவலாளி கூட தடுக்கவில்லையா? நூறு கொலை செய்த தீவிரவாதிக்கு கூட வயிறார சோறு போட்டு, முகத்தை கருப்பு துணியால் மூடி, வலியில்லாமல் சட்டென்று தூக்கிலிட்டு கொல்லும் மனித நேய சமூகம் அல்லவா நாம் ? வெட்கம்.